சிலப்பதிகாரம்















சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இது பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடை த்தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.

பொருளடக்கம்

 [மறை

[தொகு] காலம்

சிலப்பதிகாரம் தோன்றிய காலம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை. சிலப்பதிகாரம் சங்க மரவிய காலத்தில், கி. பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றே பெரிதும் கருதப்படுகிறது.[மேற்கோள் தேவை] சிலர் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.[மேற்கோள் தேவை]

[தொகு] இளங்கோவடிகள்

முதன்மைக் கட்டுரை: இளங்கோவடிகள்
இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.
சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் ஆவார்.

[தொகு] நூலமைப்பு

காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம் , நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

[தொகு] காண்டங்கள்

  • புகார் காண்டம்
  • மதுரை காண்டம்
  • வஞ்சிக் காண்டம்

[தொகு] கதைச் சுருக்கம்

சோழ நாட்டைச் சார்ந்த மாசாத்துவான் எனும் பெரு வணிகனது மகன் கோவலனும் மாநாய்க்கன் என்பவனது மகள் கண்ணகியும் மணம் புரிந்து மகிழ்வுடன் வாழ்ந்துவந்தனர். தலைக்கோல் பட்டம் பெற்ற, ஆடற்கலை அழகி மாதவி கணிகையர் குலத்திற் பிறந்தவளாவாள். அவளின் அரங்கேற்றத்தின்போது ஆடிய ஆடல் கண்டு மனம் மயங்கிய கோவலன், கண்ணகியைத் தவிர்த்து மாதவியுடன் இன்பத்தில் திளைத்து தன் செல்வம் முழுதும் இழந்தான். கோவலன் தன்னைப் பிரிந்து சென்றபோதும் கற்பொழுக்கம் சிறிதும் பிறழாமல் அவனுடன் மனதளவிலேயே வாழ்ந்துவந்தாள் கண்ணகி. செல்வம் முழுதும் இழந்த கோவலன் மாதவியை நீங்கி கண்ணகியிடம் சேர்ந்தான். கண்ணகியின் காற்சிலம்பை விற்று வரும் பொருளில் வாணிகம் செய்ய விரும்பி, பாண்டிய நாட்டுக்கு அவளுடன் பயணம் மேற்கொண்டான்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது மனைவியின் காற்சிலம்பைச் செப்பனிடத் தன் பொற்கொல்லனிடம் அதை அளித்திருந்தான். அதைக் களவாடிய பொற்கொல்லன் சிலம்பைக் காணவில்லை என பாண்டியனிடமே முறையிட்டிருந்தான். இந்த நிலையில் பாண்டிய நாட்டிற்கு சிலம்பு விற்க வந்த கோவலன், தனது மனைவி கண்ணகியை புத்த துறவி கவுந்தியடிகளது பாதுகாப்பில் இருத்தினான். கண்ணகியின் விலைமதிப்பற்ற காற்சிலம்பை அரசனுக்கு விற்க விரும்பி, அவளது ஒரு காற்சிலம்பை மட்டும் எடுத்துக்கொண்டு அரசவைப் பொற்கொல்லனை சந்தித்தான். கண்ணகியின் காற்சிலம்பு அரசியின் சிலம்பை ஒத்திருந்தது. வஞ்சம் மிகுந்த பொற்கொல்லன், காவலர்களை அழைத்து கோவலனே அரசியின் சிலம்பைக் களவுசெய்தவன் என பொய்யுரைத்தான். வழக்கைத் தீர விசாரிக்காத நெடுஞ்செழியன், "கொண்டக்கள்வனை (கொண்ட+அந்த+கள்வனை) கொணர்க" என்பதற்கு பதில் "கொன்றக்கள்வனை(கொன்று+அந்த+கள்வனை) கொணர்க" என்று கூறி விட்டான். ஆதலால் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கருதி அவன் கொலைக் களத்தில் கொல்லப்பட்டான்.
கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த கண்ணகி, தன்வசமிருந்த மற்றொரு காற்சிலம்புடன் அரசவை விரைந்தாள். அரசனிடம் நீதி கேட்டாள். அரசியின் ஒரு காற்சிலம்பில் இருந்ததோ முத்து மணிகள். கண்ணகியின் காற்சிலம்போ மாணிக்கப் பரல்களைக் கொண்டிருந்தது. தவறிழைத்ததை உணர்ந்த நெடுஞ்செழியன், "யானோ அரசன்? யானே கள்வன்" என்றுரைத்தவண்ணம் தரையில் வீழ்ந்து உயிரிழந்தான். பின்னர் பாண்டியமாதேவியும் உயிரிழந்தாள். கோபம் தணியாத கண்ணகி, தன் மார்பைக் கிள்ளி மதுரையின் மீது எறிந்தாள். அவளது கற்பின் கணலைத் தாங்க இயலாமல் மதுரை கொழுந்துவிட்டு எரிந்தது. பின்னர் சேரநாட்டுக்கு வந்தாள் கண்ணகி. கோவலன் இறந்து 14 நாட்கள் கழி்ந்தபின்னர் விண்ணுலகிலிருந்து விமானம் ஒன்று இறங்கியது. அதிலிருந்து வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான்.கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை தோன்றினாள். கணிகையர் குலத்திற் பிறந்திருந்தாலும், கோவலனை அன்றி வேறொரு ஆடவனை மனத்தும் நினையாது வாழ்ந்த மாதவி புத்த மதத்தைத் தழுவி துறவறம் பூண்டு வாழ்ந்தாள்.

[தொகு] கதை மாந்தர்கள்

கண்ணகி - பாட்டுடைத் தலைவி. கோவலனது மனைவி. களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை. கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள்.
கோவலன் - பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன்.
மாதவி - பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய்.

[தொகு] சமூகவியல் செய்திகள்

[தொகு] அரசு முறை செய்திகள்

[தொகு] சமயக் கோட்பாடுகள்

[தொகு] மொழிபெயர்ப்புக்கள்

  • Silappathikaram, the Epic of The Anklet, beautifully translated from sen(ancient)-Tamil into English by Alain Danielou.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] உசாத்துணைகள்

  • ஆர்.கே.சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946
  • வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946
  • எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை. புதுமலர் நிலையம் வெளியீடு- 1946

[தொகு] வெளி இணைப்புகள்